டீக்கடை பஜ்ஜி சமையல் குறிப்பு (டீக்கடை பஜ்ஜி ரகசியம்)

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த டீக்கடை பஜ்ஜியை சுவைத்து மகிழுங்கள். டீக்கடை பஜ்ஜி ரகசியம் டீக்கடை பஜ்ஜி இந்திய துணைக்கண்டத்தில் உருவான ஒரு காரசாரமான தின்பண்டமாகும். பஜ்ஜி காணாத டீக்கடையே உங்களால் வீதிகளில் காணமுடியாது. நீங்களும் பலரக பஜ்ஜிகளை உங்கள் வீடுகளில் தயார் செய்தாலும் அவை டீக்கடை பஜ்ஜியின் சுவைக்கு நிகராகாது. இங்கே நான் தெரிவித்துள்ள அளவுகளில் டீக்கடை பஜ்ஜி மாவை தயார் செய்தால் அச்சுவையை நீங்கள் வீட்டிலேயே கொண்டு வர முயற்சிக்கலாம். இந்த ஒரு மாவை கொண்டே பத்து வகையான பஜ்ஜியை நீங்கள் தயாரிக்கலாம். நான் தெரிவித்துள்ள குறிப்புகளையும் யுக்திகளையும் கைக்கொண்டால் சுவை மிகுந்த டீக்கடை பஜ்ஜியை நீங்கள் தயாரிக்கலாம். சில்லிடும் இந்த மழைக்காலத்தில் சட்டினியுடன் சூடான பஜ்ஜியும் டீயும் உங்களை கதகதப்பாக வைக்க உதவும் என நான் நம்புகிறேன். டீக்கடை பஜ்ஜி தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 400 கிராம்
  • அரிசி மாவு – 200 கிராம்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • சோடா மாவு – 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
  • ஓமம் – ¼ தேக்கரண்டி
  • உப்பு, தேவைக்கேற்ப
  • தேங்காய் எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி
  • கடலை எண்ணெய், தேவைக்கேற்ப
  • வாழைக்காய் – 1 எண்ணிக்கை
  • பஜ்ஜி மிளகாய் – 1 எண்ணிக்கை
  • கற்பூரவள்ளி இலை – 2 எண்ணிக்கை
  • முட்டை – 2 எண்ணிக்கை
  • வெங்காயம் – 1 எண்ணிக்கை
  • உருளைக்கிழங்கு – 1 எண்ணிக்கை
  • பிஞ்சு சோளம் – 2 எண்ணிக்கை

டீக்கடை பஜ்ஜி செய்முறை:

  1. ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், சோடா மாவு, பெருங்காயத்தூள், ஓமம், மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்து அவற்றை நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
  2. இப்போது அந்த கலவையுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய்யை சேர்த்து கலக்கிக்கொள்ளவும். நெய்யை சேர்ப்பது டீக்கடை பஜ்ஜிக்கு நல்ல நறுமணத்தை கொடுக்கிறது.
  3. சிறுக சிறுக நீர் சேர்த்து கலவையை இட்லி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.
  4. இப்போது, வாழைக்காய், உருளைக்கிழங்கு, மற்றும் வெங்காயத்தை தோலுரித்துக்கொண்டு அவற்றை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  5. பஜ்ஜி மிளகாவை இரண்டு பாகங்களாக வெட்டிக்கொள்ளவும்.
  6. முட்டையை அவித்து ஓட்டினை நீக்கிக்கொள்ளவும்.
  7. ஒரு வாணலியில் கடலை எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும். நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், முட்டை, மற்றும் கற்பூரவள்ளி இலையை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும்.
  8. தயார் செய்துள்ள விதவிதமான பஜ்ஜிகளை தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறி மழைக்கால குதூகளத்தை உங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

குறிப்புகளும் யுக்திகளும்

  1. டீக்கடை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு வறுக்கும் போது பஜ்ஜி மாவு கரைந்து வாணலியில் ஒட்டிக்கொள்வதை தவிர்க்க மாவை இட்லி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.
  2. ஒரு அருமையான டீக்கடை (வாழைக்காய்) பஜ்ஜியை தயார் செய்ய, வாழைக்காயின் இரண்டு நுனிகளையும் வெட்டி அதன் நடுப்பகுதியை மட்டுமே பயன்படுத்தவும்.
  3. வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளின் மெல்லிய சீரான துண்டுகளை வெட்டி எடுக்க கத்திக்கு பதிலாக சீவலை பயன்படுத்தவும்.
  4. பஜ்ஜி மிளகாயின் விதைகளை அகற்றிவிட்டு அதை பஜ்ஜிக்கு பயன்படுத்தவும்.
  5. காலிஃபிளவர், காளான், பிரட்டு, மற்றும் இதர காய்கறிகளை பயன்படுத்தியும் நீங்கள் பஜ்ஜி தயார் செய்யலாம்.