வஞ்சிரம் மீன் குழம்பு சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த வஞ்சிர மீன் குழம்பை சுவைத்து மகிழுங்கள்.

வஞ்சிரம் மீனில் இதய கோளாறுகளை தவிர்க்கும் ஆற்றல், விட்டமின் டி சத்து, மூளை ஆரோக்கியம் போன்ற பல்வேறு நன்மைகள் காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியம் நிறைந்த சுவையான இந்த வஞ்சிரம் மீன் உணவை தயார் செய்து ஆரோக்கிய பலன்களை பெறுங்கள். இந்த வஞ்சிரம் மீன் குழம்பை இரண்டு நாட்கள் கூட வைத்திருந்து சாப்பிடலாம், ஆனாலும் அதன் சுவையிலோ ஆரோக்கியத்திலோ எவ்வித குறைவும் இருக்காது. சரி, வஞ்சிரம் மீன் குழம்பு சமைப்பதற்கு தேவையான வழிமுறைகளை பார்ப்போம்.

வஞ்சிரம் மீன் குழம்பு சமைக்க தேவையான பொருட்கள்:

  • வஞ்சிரம் மீன் – 1 கிலோ
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 4 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
  • உப்பு, தேவைக்கேற்ப
  • வீட்டில் செய்த குழம்பு மசாலா – 1 மேஜைக்கரண்டி
  • சீரகத்தூள் – ½ தேக்கரண்டி
  • தனியா தூள் – 1 தேக்கரண்டி
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • புளி கரைசல் – 2 மேஜைக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 200 கிராம்
  • நடுத்தர அளவு தக்காளி – 3 எண்ணிக்கை
  • தேங்காய் – 3 துண்டுகள்
  • வெந்தயம் – ½ தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 1 எண்ணிக்கை
  • பூண்டு – 5 எண்ணிக்கை
  • கருவேப்பிலை, தேவைக்கேற்ப

வஞ்சிரம் மீன் குழம்பு செய்முறை:

  1. வஞ்சிரம் மீன் குழம்பு செய்ய முள்ளில்லா வஞ்சிரம் மீனே சிறந்தது. அப்போது தான் குழந்தைகள் அதை சிரமமில்லாமல் சாப்பிட முடியும். வஞ்சிரம் மீன் குழம்பை சமைப்பதற்கு முன்பாக அதை நான் மசாலாவில் ஊற வைத்தேன். மசாலாவை தயார் செய்ய 1 தேக்கரண்டி எண்ணெய், மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி வீட்டில் செய்த குழம்பு மசாலா, மற்றும் 2 தேக்கரண்டி நீர் ஆகியவற்றை வஞ்சிரம் மீன் துண்டுகளுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலாவில் வஞ்சிரம் மீனை 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  2. இப்போது வஞ்சிரம் மீன் குழம்பு தயார் செய்ய தேவையான மற்ற மசாலாக்களை தயார் செய்வோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய், சிறிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  3. இப்போது தேங்காய் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். இந்த கலவை தயார் ஆனவுடன் அது குளிர்வதற்கு விட்டுவிட்டு அதை ஒரு கூழாக அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கடாயை எடுத்து, அதில் அரைத்த விழுது, வீட்டில் செய்த குழும்பு மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத்தூள் (கவிச்சி வாடையை தவிர்க்க), மற்றும் புளி கரைசல் ஆகியவற்றை சேர்த்து அவற்றை நன்றாக கலக்கி தேவையான அளவு உப்பு மற்றும் நீரை சேர்க்கவும். இந்த பதத்தில் வஞ்சிரம் மீன் குழம்பு அதிக காரமாக இருக்க வேண்டுமெனில் அதற்கேற்ப கூடுதல் மசாலாவை சேர்த்துக்கொள்ளவும்.
  5. இப்போது இன்னொரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். நல்லெண்ணெயை சேர்ப்பது வஞ்சிரம் மீன் குழம்புக்கு மேலும் சுவை சேர்க்கும். மீன் குழம்புக்கும் இதர புளிக்குழம்புக்கும் மேலும் சுவை சேர்க்க நான் எப்போதுமே நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்துவேன்.
  6. இப்போது சூடான எண்ணெயில் வெந்தயம், பூண்டு (பூண்டை நசுக்கி போடக்கூடாது, ஏனெனில் அது குழம்பின் சுவையையே கெடுத்துவிடும்), நறுக்கி 5 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
  7. இப்போது, நாம் முன்னரே தயார் செய்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கடாயை மூடி 7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  8. இப்போது மசாலாவில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை குழம்பில் போட்டு கொதிக்க விடவும். இப்போது கடாயை மூடக்கூடாது. மேலும் 7 நிமிடங்கள் குழம்பை கொதிக்கவிடவும். குழம்பில் மீது எண்ணெய் மிதந்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.
  9. கம கம வஞ்சிரம் மீன் குழம்பு உங்களை நாவின் சுவை நரம்புகளை சுண்டியிழுக்க தயாராகிவிட்டது. இதை உங்கள் வீட்டில் முயற்சித்து உங்கள் கணவரையும் குழந்தைகளையும் அசத்துங்கள்.