முட்டை மசாலா கிரேவி

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த முட்டை மசாலா கிரேவியை சுவைத்து மகிழுங்கள்.
இந்த உலகில் முதலில் வந்தது கோழியா இல்லை முட்டையா என்று பல நூற்றாண்டுகளாக பலர் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் முட்டை மசாலா கிரேவியை எப்படி செய்வதென்பதற்கு 100% தெளிவான பதில் இருக்கிறது. அந்த தெளிவான பதிலை இப்போது செய்முறையாக காண்போம். முட்டை மசாலா கிரேவி செய்முறைக்கு போவோமா? சரி வாங்க.
முட்டை மசாலா கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை, 4 எண்ணிக்கை
சின்ன வெங்காயம் (நறுக்கியது), 15 எண்ணிக்கை
தக்காளி (நறுக்கியது), 2 எண்ணிக்கை
கொத்தமல்லி, தேவையான அளவு
மஞ்சள் தூள், ¼ தேக்கரண்டி
காஷ்மீரி காய்ந்த மிளகாய், 5 எண்ணிக்கை
முழு தனியா, 3 தேக்கரண்டி
சீரகம், 1 தேக்கரண்டி
மிளகு, ½ தேக்கரண்டி
சோம்பு, 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை, 2 எண்ணிக்கை
ஏலக்காய், 2 எண்ணிக்கை
கிராம்பு, 2 எண்ணிக்கை
அன்னாசி பூ, 1 எண்ணிக்கை
துருவிய தேங்காய், ½ கப்பு
கடலை எண்ணெய், 2 மேஜைக்கரண்டி
உப்பு, தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
1. முட்டை மசாலா கிரேவி செய்வதற்கு முதற்படி வறுத்து அரைத்த மசாலாவை தயாரிப்பது.
2. காஷ்மீரி காய்ந்த மிளகாயையும் முழு தனியாவையும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கவும். பின்னர், இதே போல, சோம்பு, சீரகம், மிளகு, அன்னாசி பூ, இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கவும்.
3. பின்னர் துருவிய தேங்காயையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கவும். தேங்காவை இப்படி எண்ணெய் இல்லாமல் வறுத்தால் குழம்பு சீக்கிரம் கெட்டுவிடாமல் இருக்கும்.
4. இப்படி வறுத்து எடுத்த எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
5. இப்போது முட்டை மசாலா கிரேவியின் முக்கிய பொருளான முட்டையை லேசாக எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். இதற்கு அவித்த முட்டையை மேற்பக்கம் லேசாக கீறி மிளகாய் தூள் சேர்த்த எண்ணெயில் வறுத்து எடுக்கவும். இப்படி செய்வதால் முட்டை கிரேவில் உடைந்து உதிர்ந்துப்போகாமல் இருக்கும்.
6. இப்போது முட்டை மசாலா கிரேவியை தாளிப்பது எப்படி என காண்போம்.
7. வாணலியில் இரண்டு மேஜைக்கரண்டி கடலை எண்ணெயை சேர்த்து சுடாக்கவும். சுடான எண்ணெயில் சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசி பூ மற்றும் காய்ந்த மிளாகவை சேர்த்து வதக்கவும். எண்ணெய் பொரியும் போது அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
8. தாளிப்பு பொருட்களுக்கு தேவையான உப்பை சேர்க்கவும். கிரேவி பதம் வரும் போது அதற்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொள்ளலாம். வெங்காயம் பொன்நிறத்தில் வதங்கி வரும் போது நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
9. கலவை நன்றாக வதங்கியவுடன் சிறிது கொத்தமல்லியை சேர்க்கவும். பின்னர், விழுதாக அரைத்து வைத்துள்ள மசாலாவையும் தேவையான அளவு நீரையும் மற்றும் தேவையெனில் சுவைக்கேற்ப உப்பை சேர்த்து கிரேவியை 10 நிமிடங்கள் வேகவிடவும்.
10. பின்னர் கிரேவியில் வறுத்த முட்டையை சேர்த்து 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வேக விடவும்.
11. சுட சுட முட்டை மசாலா கிரேவி பரிமாற தாயர்.