மக்ரோனி மசாலா பாஸ்தா

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான இத்தாலிய சமையல் முறையில் தயாரான மக்ரோனி மசாலா பாஸ்தாவை சுவைத்து மகிழுங்கள்.

என்ன குட்டீஸ், இந்த லாக்டவுன்ல வீட்டுல உங்க அப்பா அம்மாவோட தொல்ல தாங்கலையா? சரி, உங்க அம்மாவ சமையல்கட்டுல கொஞ்சம் பிஸியா வெச்சிடலாமா? சரி, வாங்க அவங்கள கொஞ்ச நேரம் பிஸியா வெச்சி நம்ம டேஸ்டா பாஸ்தா சாப்பிடலாம். இதோ, உங்க டேஸ்டுக்கு ஹாட்ஸ்பாட் கிச்சன்ல நாங்க கொண்டு வரோம், மக்ரோனி மசாலா பாஸ்தா.

மக்ரோனி மசாலா பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்:

 • மக்ரோணி பாஸ்தா, 1 கப்பு (பெரியது)
 • வெங்காயம் (நறுக்கியது), 2 எண்ணிக்கை
 • விழுதாக அரைத்த தக்காளி, 3 எண்ணிக்கை
 • தக்காளி சாஸ், 3 தேக்கரண்டி
 • பூண்டு & கொத்தமல்லி, சிறிது
 • மிளகாய் தூள், 1 தேக்கரண்டி
 • சிக்கன் 65 பவுடர், 1 தேக்கரண்டி
 • சோம்பு தூள், 1 தேக்கரண்டி
 • சீஸ் (பாலாடைக்கட்டி), தேவைக்கேற்ப
 • எண்ணெய்
 • உப்பு, தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:

 1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 கப்பு நீரை எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொள்ளவும். கூடவே சிறிது எண்ணெய் விடவும். இது பாஸ்தா பாத்திரத்தில் ஒட்டிக்கொள்வதை தவிர்க்கும்.
 2. இதில் பாஸ்தாவை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேகவிடவும். ஒருவேளை நீங்கள் வேறு வகையான பாஸ்தா ஏதேனும் வாங்கியிருந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு வேக வைக்கவும்.
 3. பாஸ்தா வெந்தவுடன் அதை குளிர்ந்து நீரில் நனைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
 4. இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை சூடாக்சி நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு தாளிக்கவும். பின்னர், விழுதாக அரைத்து வைத்துள்ள தக்காளியை இதில் சேர்த்து தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும். தேவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்.
 5. பின்னர், மிளகாய் தூள், சோம்பு தூள், சிக்கன் 65 தூள் ஆகியவற்றை சேர்த்து கலவையை நன்றாக கலக்கவும்.
 6. சற்று நேரத்தில் தக்காளி சாஸை சேர்த்து வேகவைத்துள்ள பாஸ்தாவையும் சேர்த்து கலக்கவும். பின்னர், கொத்தமல்லி மற்றும் சீஸை தூவி பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
 7. குட்டீஸ், நாக்கு ஊறும் மக்ரோணி மசாலா பாஸ்தா ரெடி. வாங்க, ஒரு புடி புடிக்கலாம்.