எளிமையான ஃப்ரூட் கஸ்டர்டு சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த ஃப்ரூட் கஸ்டர்டை சுவைத்து மகிழுங்கள்.

ஃப்ரூட் கஸ்டர்டு என்பது கஸ்டர்டு மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு கிரீம் பதத்தில் காணப்படும் ஒரு இனிப்பு வகையாகும். இதில் பலதரப்பட்ட புதுசுவை நிறைந்த பழங்களை நாம் சேர்ப்பதால் ஃப்ரூட் கஸ்டர்டு ஒரு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. உங்கள் சுவைக்கேற்பவும் விருப்பமான பழங்களையும் ஐஸ்கிரீம்களையும் இதில் சேர்ப்பதால் இந்த ஃப்ரூட் கஸ்டர்டை சாப்பிட யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. வீட்டில் பறிமாறப்படும் சிறப்பு விருந்தை முடித்து வைக்க ஃப்ரூட் கஸ்டர்டே ஏற்ற உணவாக இருக்கும். குளுமையான ஃப்ரூட் கஸ்டர்டு உடன் உங்கள் கோடை நாட்களை குளிர்ச்சியாக கழிக்கலாம் வாங்க.

ஃப்ரூட் கஸ்டர்டு தயார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

 • கஸ்டர்டு பவுடல் – 6 தேக்கரண்டி
 • பால் – ¼ கப்பு
 • ஆவின் பால் – 1 லி
 • சர்க்கரை – 12 தேக்கரண்டி
 • பழங்கள், தேவைக்கேற்ப
 • ஐஸ்கிரீம், தேவைக்கேற்ப

ஃப்ரூட் கஸ்டர்டு செய்முறை:

 1. ஒரு கிண்ணம் எடுத்து அதில் கஸ்டர்டு பவுடரும் ¼ கப்பு பாலையும் சேர்த்து பவுடர் கட்டிகளாக இல்லாவண்ணம் அவற்றை நன்றாக கலக்கிக்கொண்டு ஒருபுறம் வைக்கவும்.
 2. 1 லிட்டர் ஆவின் பாலை நீர் எதுவும் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும். பாலில் கொதி வந்தவுடன் அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
 3. குறைந்த தீயில் கொதிக்கும் பாலில், கஸ்டர்டு பவுடர் மற்றும் பால் கலவையை சிறிது சிறிதாக சேர்க்கவும். இப்படி கஸ்டர்டு பவுடர் கலவையை சேர்க்கும் போது பாலை கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கட்டிகள் எதுவும் பாலில் ஏற்படாமல் இருக்கும்.
 4. பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, நல்ல கெட்டியான பதம் வரும் வரை கலவையை கலக்கிக்கொண்டே இருக்கவும்.
 5. கலவை கெட்டியானதும், கஸ்டர்டை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொண்டு அதை ஆற விடவும். இப்போது, ஃப்ரூட் கஸ்டர்டு செய்ய தேவையான கஸ்டர்டு தயாராகிவிட்டது.
 6. இப்போது, ஆப்பிள், மாதுளைப்பழம், பேரிக்காய், வாழைப்பழம், மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களை நறுக்கி கஸ்டர்டில் சேர்த்து நன்றாக கலக்கவும். கஸ்டர்டு ஃப்ரூட்டில் உங்களுக்கு தேவையான வேறு பழங்களையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான சுவையான கஸ்டர்டு ஃப்ரூட் இப்போது தயார்.
 7. தயாரான கஸ்டர்டு ஃப்ரூட்டை சர்விங் கிளாசில் போட்டு அதில் உங்கள் விருப்பமான ஐஸ்கிரீமையும் சேர்த்து ஃபிரிட்ஜில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்தால் பலே பலே கஸ்டர்டு ஃப்ரூட் உங்கள் மேஜையில் தயார்.
 8. எல்லோருக்கும் இந்த உணவை பரிமாறி குளுமையாக உங்கள் கோடை விருந்தை கொண்டாடுங்கள்.