நெத்திலி மீன் வறுவல் சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த நெத்திலி மீன் வறுவலை சுவைத்து மகிழுங்கள்.
நெத்திலி மீன் வறுவல் 3 படியில் எளிதாக தயார் செய்யப்படும் ஒரு உணவாகும். சுத்தம் செய்து மசாலாவில் ஊற வைத்து வறுத்தால் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார். நெத்திலி மீன் வறுவல் தயார் செய்ய தேவையான பொருட்களையும் வழிமுறையையும் இங்கே காணலாம்.
நெத்திலி மீன் வறுவல் தயார் செய்ய தேவையான பொருட்கள்:
• நெத்திலி மீன் – ½ கிலோ
• மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
• கல்லுப்பு – 1 கைப்பிடி
• தூள் உப்பு – தேவைக்கேற்ப
• மிளகு தூள் – 1 தேக்கரண்டி
• மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
• கடலை மாவு – 1 தேக்கரண்டி
• சோளமாவு – 2 தேக்கரண்டி
• இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
• வீட்டில் செய்த குழம்பு மசாலா – 1 தேக்கரண்டி
• எண்ணெய் – தேவையான அளவு
நெத்திலி மீன் வறுவல் செய்முறை:
1. சுத்தம் செய்தல்
• கல்லுப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நெத்திலி மீனை ஆய்ந்து சுத்தம் செய்யவும்.
• பிறகு ஆய்ந்த மீனை நீரில் 3 முதல் 4 முறை கழுவவும்.
2. மசாலாவில் ஊற வைத்தல்
• ஒரு கிண்ணம் எடுத்துக்கொண்டு அதில் மிளகு தூள், மிளகாய் தூள், கடலை மாவு, சோளமாவு, தூள் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, வீட்டில் செய்த குழம்பு மசாலா, 2 தேக்கரண்டி எண்ணெயை மற்றும் நீரையும் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு விழுதாக தயார் செய்துக்கொள்ளவும்.
• இந்த விழுதை நெத்திலி மீன் மீது பூசி அதை பிரிட்ஜில் வைத்து 20 நிமிடங்களுக்கு மசாலா மீனில் ஊறுவதற்கு அனுமதிதக்கவும்; பின்னர் அடுத்த 10 நிமிடங்கள் வெளியில் வைத்து ஊற விடவும்.
3. வறுத்தல்
• ஒரு வாணலியை எடுத்து அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
• அடுப்பை குறைந்த தீயில் வைத்து அதில் மசாலாவில் ஊறவைத்த மீனை வறுத்தெடுக்கவும். மீனை நீண்ட நேரம் வறுக்கக்கூடாது. அப்படி செய்தால், அது மீனின் மொறுமொறுப்பு தன்மையை கெடுத்து இரப்பர் போன்ற ஒரு தன்மையை கொடுத்துவிடும்.
• நெத்திலி மீன் வறுவல் சுவைக்க தயாராகிவிட்டது.
• நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை கொண்டு வறுத்த நெத்திலி மீனை அலங்கரிக்கவும்.
• இந்த நெத்திலி மீன் வறுவலை திண்பண்டமாகவும் சுவைத்து மகிழலாம்.
• மொறுமொறு நெத்திலி மீன் வறுவலை தக்காளி சாஸுடன் தனியே சுவைக்கலாம் அல்லது உணவுடன் கூட சேர்த்தும் சுவைக்கலாம்.