இறால் தொக்கு சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த இறால் தொக்கை சுவைத்து மகிழுங்கள்.

இறால் தொக்கு கடல் உணவு பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனவே கூறலாம். எப்போதுமே நீங்கள் வீட்டில் இறால் தொக்கை வழக்கமான பானியிலேயே செய்து வரலாம். ஆனால், இன்று ஒரு மாற்றத்திற்காக, நான் சொல்லித்தரும் இந்த முறையில் இறால் தொக்கை முயற்சித்து பாருங்கள். நான் அடித்து சொல்லுவேன் நிச்சயம் நீங்கள் இந்த இறால் தொக்கை விரும்பி அதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருவீர்கள் என்பது உறுதி. சரி, இறால் தொக்கு செய்முறைக்கு நேராக போவோம் வாருங்கள்.

இறால் தொக்கு சமைக்க தேவையான பொருட்கள்:

 • இறால் – 1 கிலோ
 • சீரகம் – 1 தேக்கரண்டி
 • வெங்காயம் – 4 எண்ணிக்கை
 • தக்காளி – 2 எண்ணிக்கை
 • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 • வீட்டில் செய்த குழம்பு மசாலா – 2 மேஜைக்கரண்டி
 • கடலெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
 • கல்லுப்பு, தேவையான அளவு
 • உப்பு, தேவையான அளவு

இறால் தொக்கு செய்முறை:

 1. முதலில் இறாலை எடுத்து அதை இறால் தம் பிரியாணியில் எப்படி சுத்தம் செய்தோமே அதேப்போல இங்கும் சுத்தம் செய்துக்கொள்ளவும். இறாலில் கல்லுப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்யவும். எப்போது இறாலை சுத்தம் செய்தாலும் அதில் குடலை நீக்குவதை நினைவில் கொள்ளவும். பின்னர் 3 முதல் 4 முறை இறாலை நீரில் கழுவவும்.
 2. 1/3 தேக்கரண்டி மஞ்சள் தூள், வீட்டில் செய்த குழம்பு மசாலா, உப்பு, மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி அதில் இறாலை ஊற வைக்கவும்.
 3. ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அதிக தீயில் வைத்து வெங்காயத்தை வதக்கவும்.
 4. வெங்காயம் பாதியளவு வெந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
 5. இஞ்சி பூண்டு வாசம் நன்றாக வந்தவுடன், இறாலை சேர்த்து கடாயை மூடி நன்றாக சமைக்கவும். தொக்கில் நீர் வற்றும் வரை சமைத்தால் இறால் பாதியளவு வெந்துவிடும்.
 6. இப்போது, தொக்கில் தக்காளி சேர்த்து வதக்கவும். இந்த பதத்தில் தக்காளி சேர்த்தால் தான் அசைவம் நன்றாக வெந்துவரும்.
 7. பின்னர் தொக்கை நன்றாக கிளறி கடாயை மூடி 1 நிமிடத்திற்கு வேகவிடவும்.
 8. பிறகு வீட்டில் செய்த குழம்பு மசாலாவையும் தேவையான அளவு நீரையும் சேர்த்து கிளறவும். உப்பு இறாலுக்கு போதுமான அளவு உள்ளதா என்பதை சரிபார்த்து பின்னர் கடாயை மூடி வேகவிடவும். முதலில் அடுப்பை அதிக தீயில் வைத்து 15 நிமிடங்களும் பின்னர் குறைந்த தீயில் வைத்து 5 நிமிடங்களும் இறால் தொக்கை சமைக்கவும்.
 9. தொக்கில் எண்ணெய் மிதந்து வந்தவுடன், இறால் தொக்கு தயார். இப்போது, தொக்கின் மீது கொத்தமல்லியை தூவி அடுப்பிலிருந்து கடாயை இறக்கவும்.
 10. உங்கள் குடும்பத்திற்கு இந்த இறால் தொக்கை பரிமாறி சந்தோஷப்படுங்கள்.