கேரளா ஸ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்)

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

கேரளா என சொல்லும் போதே பசுமை போர்த்திய நிலபரப்பும் படகுகள் சூழ்ந்த ஓடைகளும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த அழகிய சுழலுக்கு சுவை சேர்க்கும் ஒரு அருமையான உணவை தான் இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். அந்த சுவையான உணவு கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்).

கேரளா ஷ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்):

மீன்மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

  • வெள்ளை வௌவால் மீன் / கறிமீன்
  • மிளகாய் தூள், 2 தேக்கரண்டி
  • தனியா தூள், 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள், ¼ தேக்கரண்டி
  • எலுமிச்சை, 1 எண்ணிக்கை
  • உப்பு, தேவையான அளவு

மசாலா கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய், 2 மேஜைக்கரண்டி
  • சின்ன வெங்காயம், 10 எண்ணிக்கை
  • பெரிய நாட்டுத்தக்காளி (நறுக்கியது), 1 எண்ணிக்கை
  • மிளகாய் தூள், 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள், 1 தேக்கரண்டி
  • மிளகு, ½ தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது, சிறிது
  • வாழை இலை

செய்முறை விளக்கம்:

  1. கேரளா ஸ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்) செய்ய தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. கேரளா ஸ்பெஷல் மீன் பொலிச்சது செய்ய சிறந்த மீன் கறிமீன் ஆகும், ஆனாலும் இப்போது வெள்ளை வௌவால் மீனை கொண்டு இதை தயார் செய்வோம்.
  3. வெள்ளை வௌவால் மீனை குடல் செவுள் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும். மேலும் மீனில் மசாலா நன்கு ஊறுவதை உறுதி செய்ய மீனின் இருபக்க மேற்பரப்புகளிலும் வரி வரியாக வெட்டிக்கொள்ளவும்.
  4. இப்போது, மீன் மசாலா செய்வது எப்படி என பார்ப்போம். நாம் எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அதில் எலுமிச்சை பழச்சாறையும் எண்ணெயையும் சேர்த்து மசாலாவை நன்கு கலக்கிக்கொள்ளவும். இதில் எண்ணெக்கு பதிலாக நீரையும் பயன்படுத்தலாம், ஆனாலும் எண்ணெயை பயன்படுத்தினால் மசாலா மீனிலிருந்து உதிராது.
  5. தயாரான மசாலாவை மீனின் மீதும் அதன் பக்கவாட்டுகளில் ஏற்படுத்தியுள்ள வரி வரியான வெட்டுகளிலும் நன்கு பூசி மீனை மசாலாவில் 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  6. 15 நிமிடங்கள் கழித்து வாணலியில் எண்ணெய் விட்டு மீனை 75% அளவிற்கு பொறியவிட்டு எடுக்கவும். மீனை பொறித்த எண்ணெயிலேயே நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி வந்தவுடன் தயாராக உள்ள இஞ்சி பூண்டு விழுதையும் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளையும் சேர்த்து தொடர்ந்து அந்த கலவையை வதக்கவும். கரம் மசாலா சேர்ப்பது இந்த கேரளா ஸ்பெஷல் மீன் பொலிச்சதுக்கு கூடுதல் சுவையை தரும். நீங்கள் விரும்பினால் இந்த உணவில் தேங்காய் பாலையும் சேர்த்து சமைக்கலாம்.
  7. கிட்டதட்ட ஒரு கிரேவி பதம் வந்தவுடன் இதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர், இதில் சிறிது மிளகும் தேவையான அளவு உப்பும் சேர்த்து தொடர்ந்து வதக்கவும். ஓரளவு இந்த கலவை வதங்கி வந்ததும், வாணலியை மூடியிட்டு கலவையை நன்றாக வேகவிடவும். கிரேவி தயாரானவுடன் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கவும்.
  8. வாழையிலையில் மீனை சமைப்பதற்கு முன்பாக அதை தீயில் லேசாக வாட்டி எடுக்கவும். இப்படி செய்வதால் வாழையிலை மடிப்பதற்கு ஏற்ற வகையில் மிருதுவாகிவிடும். 
  9. மீனின் மேற்புறமும் கீழ்ப்புறமும் சமைத்து வைத்துள்ள கிரேவியை பூசி மீனை வாழையில் சுற்றி ஒரு நூலைக்கொண்டு கட்டிக்கொள்ளவும். 
  10. இந்த வாழையிலையை வாணலியில் வைத்து குறைந்த அளவு தீயில் மீனை வாட்டவும். வாணலிக்கு மூடியிட்டு வைத்தால் வாழையிலையின் சுவை நன்றாக மீனில் இறங்கும்.
  11. மூன்று நிமிடங்கள் மீன் தீயில் வெந்தவுடன் அதை இறக்கிவிடவும். இப்போது கேரளா ஸ்பெஷல் மீன் பொலிச்சது (வெள்ளை வௌவால்) பரிமாற தயார்.