ஓட்டல் சால்னா / எம்டி சால்னா சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த ஓட்டல் பானி எம்டி சால்னா உணவை சுவைத்து மகிழுங்கள்.
என்னதான் ஒருவருக்கு சமையல் ஜாம்பவானாக தாயோ மனைவியோ அமைந்தாலும் கூட வெளியே வந்து காரசாரமான சில ஓட்டல் உணவுகளை சுவைப்பதே அலாதி சுவை தான். இப்படி பலரது வாழ்வில் அவர்களது நாவிற்கு சுவைகூட்டி தனக்கென ஒரு இரசிகர் பட்டாளத்தையே அமைத்திருக்கும் ஒரு ஓட்டல் உணவு தான் பரோட்டா. இப்படிப்பட்ட பரோட்டாவிற்கு பல காலமாக ஓட்டல் கூட்டாளியாகவும், பல பிரம்மச்சாரிகளின் ஓட்டல் தோழியாகவும் இருந்தும் வரும் ஓட்டல் சால்னாவை தான் இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் எப்படி செய்வதென பார்க்கப்போகிறோம். இந்த ஓட்டல் சால்னாவை எம்டி சால்னா எனவும் அழைப்பார்கள்.
ஓட்டல் சால்னா / எம்டி சால்னா செய்ய தேவையான பொருட்கள்:
• கடலெண்ணெய், 3 மேஜைக்கரண்டி
• பெரிய வெங்காயம் (நறுக்கியது), 2 எண்ணிக்கை
• பெரிய நாட்டுத்தக்காளி (நறுக்கியது), 2 எண்ணிக்கை
• பச்சை மிளகாய், 2 எண்ணிக்கை
• சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டுள்ள ½ முடி தேங்காய்
• புதினா மற்றும் கொத்தமல்லி, ½ கப்பு
• இஞ்சி பூண்டு விழுது, 1 தேக்கரண்டி
• மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி
• காஷ்மீரி சிகப்பு மிளகாய் தூள், 2 தேக்கரண்டி
• சிக்கன் மசாலா, 1 தேக்கரண்டி
• கரம் மசாலா, ½ தேக்கரண்டி
• முந்திரி பருப்பு, 10 எண்ணிக்கை
• கசகசா, 1 தேக்கரண்டி
• சோம்பு, 1 தேக்கரண்டி
• உடைத்த கடலை, 1 தேக்கரண்டி
• இலவங்கப்பட்டை, 2 எண்ணிக்கை
• கிராம்பு, 2 எண்ணிக்கை
• ஏலக்காய், 2 எண்ணிக்கை
• அன்னாசி பூ, 1 எண்ணிக்கை
• கல்பாசி, 1 சிட்டிகை
• உப்பு, தேவையான அளவு
ஓட்டல் சால்னா / எம்டி சால்னா செய்முறை விளக்கம்:
1. முதலில், ஓட்டல் சால்னா / எம்டி சால்னா செய்ய தேவையான பொருட்களை எல்லாம் தயார் செய்துக்கொண்டு அடுப்பை தீ மூட்டவும்.
2. பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் கடலெண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சுடான உடன் அதில் அன்னாசி பூ, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி ஆகியவற்றை சேர்க்கவும். கல்பாசி சேர்ப்பதால் சால்னாவிற்கு கூடுதல் சுவை கிடைக்கும்.
3. சேர்க்கப்பட்ட பொருட்கள் பொரியும் நிலைக்கு வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை வாணயில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், எடுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகள், முந்திரி பருப்பு, உடைத்த கடலை, கசகசா, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
5. வெங்காயம் வதங்கி வந்தவுடன், அதில் பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். புதினா சேர்ப்பது ஓட்டல் சால்னா / எம்டி சால்னாவிற்கு நல்ல சுவையை தரும். பின்னர், இஞ்சி பூண்டு விழுதையும் அதில் சேர்த்து வதக்கவும்.
6. பின்னர், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சிக்கன் மசாலா மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தொடர்ந்து வதக்கவும். கூடவே தக்காளியையும் சேர்த்துக்கொள்ளவும். தக்காளி நன்றாக வதங்கவேண்டும் என்கிற அவசியமில்லை. வேண்டுமெனில், அதை விழுதாக அரைத்தும் ஓட்டல் சால்னா / எம்டி சால்னாவில் சேர்க்கலாம்.
7. தேவையான அளவு உப்பை சேர்த்த பின்னர், நாம் விழுதாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை வாணலியில் சேர்த்து கூடவே தேவையான அளவு நீரையும் சேர்த்து ஓட்டல் சால்னா / எம்டி சால்னாவை கொதிக்க விட வேண்டும்.
8. சால்னாவில் எண்ணெய் மிதக்கும் நிலைக்கு வரும் போது, சிறிது கொத்தமல்லியை தூவி வாணலியை அடுப்பிலிருந்து இறக்கவும்.
9. இப்போது, பரோட்டா, சப்பாத்தி மற்றும் தோசையுடன் சுவைத்து மகிழ கம கம ஓட்டல் சால்னா / எம்டி சால்னா தயார்.