காளான் (மஷ்ரூம்) மஞ்சூரியன்

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். மாலை நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து தேனீர் குடிக்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனி கொடுக்க எதுவும் இல்லையா. கவலை வேண்டாம். இதோ உங்கள் குட்டீஸை குதூகலப்படுத்த ஹாட்ஸ்பாட் கிச்சன் கல கல சமையலை கொண்டு வருகிறது, மஷ்ரூம் மன்சூரியன் (உலர்ந்தது). மஷ்ரூம் மன்சூரியன் (உலர்ந்தது) செய்து உங்கள் குழந்தைகளை குஷிப்படுத்துங்கள். மஷ்ரூம் மன்சூரியன் (உலர்ந்தது) செய்ய தேவையான பொருட்கள்:

 • பட்டன் மஷ்ரூம், ¼ கிலோ
 • சோளமாவு, 4 மேஜைக்கரண்டி
 • மைதா மாவு, 1 தேக்கரண்டி
 • குடைமிளகாய், 2 எண்ணிக்கை
 • பெரிய வெங்காயம், 3 எண்ணிக்கை
 • மிளகுத்தூள், 1 தேக்கரண்டி
 • சோயா சாஸ், 1 தேக்கரண்டி
 • சில்லி சாஸ், 2 தேக்கரண்டி
 • எண்ணெய், தேவையான அளவு
 • உப்பு, தேவையான அளவு
 • பூண்டு (நறுக்கியது), 3 பல்லு
 • விநிகர் (சமையல்), 1 தேக்கரண்டி
 • வெங்காயத்தாள், சிறிது

  செய்முறை விளக்கம்:

 1. பட்டன் மஷ்ரூம்களை நீரில் கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
 2. நறுக்கிய மஷ்ரூம் துண்டுகளுடன் 4 தேக்கரண்டி சோளமாவு, 1 மேஜைக்கரண்டி நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
 3. பின்னர் இந்த கலவையில் 1 தேக்கரண்டி மைதாமாவை சேர்த்து கலக்கி ஒரு பக்கம் வைக்கவும்.
 4. குடைமிளகாய், வெங்காயத்தாள் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 
 5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடான எண்ணெயில் கலவையாக தயார் செய்துள்ள மஷ்ரூம்களை போட்டு பொன்நிறமாக வறுத்து எடுக்கவும்.
 6. வேறு ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டுகளை போட்டு வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் குடைமிளகாவையும் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
 7. இப்போது, உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள், சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் விநிகரை சேர்த்து வதக்கவும். பின்னர், சோளமாவை நீரில் கரைத்து கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும். அதைத்தொடர்ந்து வறுத்து வைத்துள்ள மஷ்ரூமை சேர்க்கவும்.
 8. மஷ்ரூம் மீது சோளாமாவு படலமாக படியும் வரை கலவையை நன்றாக கலக்கிவிடவும்.
 9. இப்போது, தேனீருடன் சுவைத்து மகிழ மொறு மொறு மஷ்ரூம் மன்சூரியன் தயார். குழந்தைகளே வாங்க ஜாலியா சாப்பிடலாம்!