நண்டு மிளகு வறுவல்

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

இருமலுக்கும் காய்ச்சலுக்கும் வீட்டிலேயே தயார் செய்யப்படும் ஒரு நல்ல மருந்து நண்டு ஆகும்.  அந்த நண்டினை பல வகைகளில் நாம் தயார் செய்து பரிமாறலாம். அதில் ஒருவகை உணவான நண்டு மிளகு வறுவலை தான் நாம் இன்று ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம்.

நண்டு மிளகு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

 • நண்டு, 1 கிலோ
 • சின்ன வெங்காயம் (நறுக்கியது), 25 எண்ணிக்கை
 • பெரிய வெங்காயம் (நறுக்கியது), 1 எண்ணிக்கை
 • தக்காளி (நறுக்கியது), 2 எண்ணிக்கை
 • பூண்டு, 15 பல்
 • மிளகாய் தூள் (வீட்டில் அரைத்தது), 1 மேஜைக்கரண்டி
 • மிளகு, 2 தேக்கரண்டி
 • சீரகம், 1 தேக்கரண்டி
 • சோம்பு, ½ தேக்கரண்டி
 • தேங்காய், 3 துண்டுகள்
 • உப்பு, தேவையான அளவு
 • நல்லெண்ணெய், 3 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

 1. எப்போது நண்டு வாங்கினாலும், அதை அமாவாசைக்கு 5 நாட்களுக்கு முன் பின் ஆகிய பத்து நாட்களுக்குள் வாங்கினால் மாத்திரமே நல்ல சதைப்பற்றுள்ள நண்டுகளாக கிடைக்கும்.
 2. நண்டு மிளகு வறுவல் செய்ய தேவையான நண்டை சுத்தம் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
 3. எடுத்து வைத்துள்ள மிளகு, சீரகம், தேங்காய், நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
 4. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை சூடாக்கவும். சூடான எண்ணெயில் சோம்பை போட்டு தாளிக்கவும்; சோம்பு பொரிந்த வந்தவுடன் அதில் கருவேப்பிலை, பூண்டு மற்றும் சின்ன வெய்காயத்தை சேர்த்து வதக்கவும். சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
 5. பின்னர், தக்காளியை சேர்த்து வதக்கவும். கலவை நன்கு வதங்கி வந்தவுடன் மிளகாய் தூளையும் ½ டம்ளர் நீரையும் சேர்க்கவும். சற்று நேரத்தில் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, கூடவே தேவையான அளவு நீரையும் சேர்த்து கலவையை வேகவிடவும்.
 6. உப்பு காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சரிப்பார்த்து தேவையெனில் உப்பையும் காரத்தையும் சேர்த்த பின்னர், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை குழம்பில் சேர்க்கவும். பின்னர் கடாயை மூடியிட்டு 10 நிமிடங்களுக்கு வேக விட வேண்டும்.
 7. 10 நிமிடங்கள் நன்கு வெந்து வந்தவுடன் அதில் கருவேப்பிலையை சேர்த்து கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும். இப்போது சுவை மிகுந்த ஆரோக்கியமான நண்டு மிளகு வறுவல் தயார்.