ஆப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயா

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான ஆட்டுக்கால் பாயாவை சுவைத்து மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயா ஒரு செட்டிநாடு முறையில் தயாரான உணவாகும். இது ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட தகுந்த ஆரோக்கியமான சுவையான உணவாகும். ஞாயிற்றுக்கிழமை காலை உணவை ஆப்பம் மற்றும் ஆட்டுக்கால் பாயாவுடன் சுவை மிகுந்ததாக மாற்றி மகிழுங்கள். ஆட்டுக்கால் பாயாவை சூப்பாகவும் சுவைத்து மகிழலாம். சரி, இப்போது ஹாட்ஸ்பாட் கிச்சனில் ஆட்டுக்கால் பாயாவையும் ஆப்பத்தையும் செய்து கொண்டாடலாமா. ஆட்டுக்கால் பாயா செய்ய தேவையான பொருட்கள்:

 • ஆட்டுக்கால் – 500 கி
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
 • உப்பு – சுவைக்கேற்ப
 • தண்ணீர் – 1 லி
 • நறுக்கிய தேங்காய் – 100 கி
 • பச்சை மிளகாய் – 5
 • கசகசா – 1 தேக்கரண்டி
 • சீரகம் – 1 ½ தேக்கரண்டி
 • முந்திரி – 10
 • எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
 • இலவங்கப்பட்டை – 2
 • கிராம்பு – 2
 • அன்னாசி பூ – 1
 • நறுக்கிய சின்ன வெங்காயம் – 10
 • நறுக்கிய தக்காளி – 2

ஆப்ப செய்ய தேவையான பொருட்கள்:

 • ஆப்ப மாவு
 • எண்ணெய்

ஆட்டுக்கால் பாயா செய்முறை

 1. கசகசா, சீரகம், மற்றும் முந்திரியை ½ மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
 2. அது நன்கு ஊறியவுடன், அதை நறுக்கிய தேங்காய் மற்றும் 3 பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அறைத்துக்கொள்ளவும்.
 3. ஆட்டுக்கால் வெந்நீரை ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
 4. இப்போது ஒரு கத்தியை கொண்டு ஆட்டுக்காலை நன்கு சுரண்டி சுத்தம் செய்யவும்.

ஆட்டுக்கால் பாயா சமைக்கும் முறை:

 1. ஆட்டுக்கால்களை ஒரு பிரஷர் குக்கரில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மற்றும் 1 லிட்டர் நீரை சேர்க்கவும். ஆட்டுக்கால் நீரில் நன்கு முழுகியிருப்பதை உறுதி செய்யவும்; இல்லையெனில் தேவையான அளவு நீரை சேர்த்துக்கொள்ளவும்.
 2. இப்போது குக்கரை மூடி அடுப்பை அதிக தீயில் வைத்து 10 விசில்கள் வரும்வரை வேகவிடவும்.
 3. 10 விசில்கள் வந்தவுடன், குக்கரை திறந்து எலும்புகள் நன்றாக வெந்துள்ளதா என்பதை பார்க்கவும். ஒருவேளை அவை நன்றாக வேகவில்லையெனில், மேலும் இரண்டு விசில்கள் வரை வேகவிடவும்.
 4. ஒரு வாணலியை எடுத்து அதில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விடவும்; மேலும் இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, மற்றும் ½ தேக்கரண்டி சீரகத்தையும் சேர்க்கவும்.
 5. இப்போது நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
 6. இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்; சற்று நேரம் வதக்கி, பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.
 7. இப்போது வேகவைத்து எடுத்துள்ள ஆட்டுக்கால்களையும் பிரஷர் குக்கரில் மீதமுள்ள நீரையும் வாணலியில் சேர்க்கவும்.
 8. தேவையெனில் உப்பை சேர்த்து ஆட்டுக்காலை வேகவிடவும்.
 9. இப்போது முன்னரே அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
 10. ஆட்டுக்கால் பாயா மிகவும் அடர்த்தியாக இருந்தால் தேவைக்கேற்ப நீரை சேர்க்கவும்.
 11. ஒருவேளை உங்களுக்கு காரசாரமான ஆட்டுக்கால் பாயா தேவையெனில், உங்கள் காரத்திற்கேற்ப மிளகு பொடியை சேர்த்துக்கொள்ளவும்.
 12. மேலும் 5 நிமிடங்களுக்கு பாயாவை கொதிக்கவிட்டு அதில் கருவேப்பிலை தூவி வாணலியை அடுப்பிலிருந்து இறக்கிக்கொள்ளவும்.
 13. நாக்கின் சுவை நரம்புகளை நடனமாட செய்யும் ஆட்டுக்கால் பாயா பரிமாற தயர்.

ஆப்பம் செய்முறை:

 1. ஆப்ப மாவு நீராக இருப்பதை உறுதி செய்யவும்.
 2. ஆப்ப கடாயில் மாவை ஊற்றி கடாயை கையில் எடுத்து நன்றாக சுற்றி விடவும்.
 3. ½ தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடாயை மூடிவிடவும்.
 4. ஆப்பத்தின் பக்கவாட்டுகள் பொன்நிறமாக வரும்வரை ஆப்பத்தை குறைந்த தீயில் வைத்து வேகவிடவும்.

ஆட்டுக்கால் பாயாவுடன் ஜோடி சேர இதோ உங்கள் ஆப்பம் தயார்.