வௌவால் மீன் வறுவல்

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த வௌவால் மீன் வறுவலை சுவைத்து மகிழுங்கள்.

வௌவால் மீனில் அதிகளவு ஒமேக 3 கொழுப்பு அமிலமும் புரதச்சத்தும் நிறைந்திருப்பதல் இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். வௌவால் மீனில் அதிகளவு தசைப்பற்று இருப்பதால் இது மிகவும் ருசிமிகுந்ததாக காணப்படுகிறது. வௌவால் மீன் வறுவலில் கவிச்சி வாடை அறவே இல்லை என்பதால் கடல் உணவை வெறுப்பவர்களும் இதை விரும்பி உண்ணுவார்கள். வௌவால் மீன் வறுவலை உண்டு அதன் ருசியை கொண்டாடும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

வௌவால் மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

  • வௌவால் மீன் – 1 எண்ணிக்கை
  • எலுமிச்சை – ½ எண்ணிக்கை
  • கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி
  • வீட்டில் செய்த குழம்பு மசாலா – 1 மேஜைக்கரண்டி
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • சோளமாவு – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • எண்ணெய் – 60 மி.லி.
  • உப்பு, தேவைக்கேற்ப

வௌவால் மீன் வறுவல் செய்முறை:

வெளவால் மீனை குடல் செதில் நீக்கி சுத்தம் செய்து பக்கவாட்டில் வெட்டுகளை ஏற்படுத்திக்கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் எலுமிச்சை சாறையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும். உப்பிட்ட எலுமிச்சை சாற்றை சுத்தம் செய்துள்ள மீன் மீது தெளித்துக்கொள்ளவும். ஒரு தட்டை எடுத்து அதில் கடலை மாவு, வீட்டில் செய்த குழம்பு மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், சோளமாவு, மஞ்சள் தூள், மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கினால் வௌவால் மீன் வறுக்க தேவையான மசலா தயார்.

மசாலாவை வௌவால் மீன் மீது தடவி ½ மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு வாணலியை எடுத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன், மிதமான தீயில் வைத்து வௌவால் மீனை சிலநிமிடங்களுக்கு வறுக்கவும். பின்னர், தீயை குறைத்து வாணலியை மூடியிட்டு வைக்கவும். மீன் ஒருபுறம் வெந்தவுடன், அதை திருப்பி போடவும். மீனின் இருபுறமும் நன்கு வெந்துவந்தவுடன், மீனை ஒரு தட்டில் எடுத்து பரிமாறவும். இதோ, சூடசூட வௌவால் மீன் வறுவல் தயார்.

குறிப்புகளும் யுக்திகளும்:

  1. வௌவால் மீன் வறுவல் நல்ல சுவையுடன் வறுவதற்கு உப்பிட்ட எலுமிச்சை சாறும் மசாலாவும் வௌவால் மீனின் பக்கவாட்டு வெட்டு பகுதிகளில் நன்கு ஊறுவதை உறுதி செய்யவும்.
  2. வௌவால் மீன் வறுவலுக்கு தேவையான மசாலாவை தயாரிக்கும் போது, அதில் ஒரு சிட்டிகை உப்பை கூடுதலாக சேர்த்தால் மீனை வறுத்தபின்னர் அது நல்ல சுவையை தரும்.
  3. வௌவால் மீன் வறுவலுக்கு தேவையான மசாலாவை தயாரிக்கும் போது, அதில் நீரை சேர்க்கக்கூடாது. மீனின் மீது எலுமிச்சை சாறு முன்னரே இருப்பதால் உலர்ந்த மசாலா அதன் மீது நன்கு ஒட்டிக்கொள்ளும்.