காளான் பிரியாணி

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாய சமையல் முறையில் தயாரான காளான் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள்.

என்னதான் உலகம் அறிவியல் ரீதியில் முன்னேற்றத்தை கண்டிருந்தாலும், நாம் நமது பாரம்பரியத்தின் மீது தனி மரியாதை வைத்துள்ளோம். ஆகவே தான், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டிய விரத மாதங்களை நாம் முறையாக கடைபிடிக்கிறோம். அத்தகைய விரத மாதங்களிலும் உங்களுடைய நாவின் சுவைக்கு வேலியிடாமல் விரத பாரம்பரியத்தையும் கெடுத்துவிடாமல் இருக்க நமது ஹாட்ஸ்பாட் கிச்சன் உங்கள் சமையலறைக்கு கொண்டு வருகிறது காளான் பிரியாணி. உங்கள் பிரியாணி வேட்கையை தனித்து உங்கள் மனதிற்கு ஆறுதல் தரும் காளான் பிரியாணி உணவை முயற்சித்து மகிழுங்கள். ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து காளான் பிரியாணி அசல் பாரம்பரிய சமையல் முறையை கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்:

இப்போது, காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை காண்போம்:

 • காளான் (நறுக்கியது), 2 பேக்குகள்
 • சீரக சம்பா அரிசி, 3 கப்பு
 • வெங்காயம் (நறுக்கியது), 3
 • தக்காளி (நறுக்கியது), 3
 • கொத்தமல்லி
 • புதினா
 • பச்சை மிளகாய், 2
 • இஞ்சி-பூண்டு விழுது, 1 தேக்கரண்டி
 • தயிர், 50 கி
 • காஷ்மீரி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி
 • கரம் மசாலா, ½ தேக்கரண்டி
 • தனியா தூள், 1 தேக்கரண்டி
 • சன்ட்ராம் எண்ணெய், 150 மி.லி.
 • நெய், 1 தேக்கரண்டி
 • பிரியாணி இலை, 1
 • சீரகம், 1 தேக்கரண்டி
 • ஏலக்காய், 4
 • அன்னாசி பூ, 1
 • கல்பாசி, 1 சிட்டிகை
 • இலவங்கப் பட்டை, 2
 • கிரம்பு, 4
 • உப்பு, தேவைக்கு ஏற்ப

செய்முறை:

காளான் பிரியாணி எப்படி செய்வதென இப்போது காண்போம்.

 1. காளான் பிரியாணி செய்வதில் முதல் படியாக, தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு வாணலியில் சன்ட்ராப் எண்ணெயை விட்டு சூடாக்கவும்; சூடான எண்ணெயில் பிரிஞ்சி இலை, சீரகம், ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, இலவங்கப் பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். சீரகம் பொரிந்து வந்தவுடன், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.
 3. வெங்காயம் பொன்நிறமாக வதங்கியவுடன் காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் கரம் மசாலா துளை சேர்த்து கலக்கவும்.
 4. நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் தயிரையும் சேர்த்து கலக்கவும். இஞ்சி-பூண்டின் வாசனை வரும் போது நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 5. நல்ல குழம்பு பதம் வரும் போது, நறுக்கி வைத்துள்ள காளானை மசாலா கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறவும். வாணலிக்கு மூடியிட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.
 6. காளான் பிரியாணிக்கு தேவையான நீர் அளவை 1:1 ½ என்கிற பதத்தில் வைக்கவும்.
 7. தேவைக்கேற்ப உப்பை சேர்த்துக்கொள்ளவும். மசாலா கலவை கொதிநிலைக்கு வந்தவுடன், 20 நிமிடங்கள் முன்னரே ஊறவைத்த சீரக சம்பா அரிசியை போட்டு நன்றாக கிளறிவிடவும்.
 8. வாணலிக்கு மூடியிட்டு அரிசி வேகும்வரை காத்திருக்கவும். அரிசி வெந்தவுடன், அடுப்பை சிறு தீயில் வைத்து காளான் பிரியாணிக்கு டம் போடவும்.
 9. ஐந்து நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து நெய்யை மேற்பரப்பில் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடங்களுக்கு டம் போடவும். நெய்யை சேர்ப்பது காளான் பிரியாணிக்கு நல்ல நறுமணத்தை கொடுக்கும்.
 10. இதோ, அருமையான நறுமணம் கமழும் காளான் பிரியாணி உங்கள் தட்டுகளை அலங்கரிக்க தயாராகிவிட்டது.
 11. நல்ல சுவைக்கு எப்போதுமே புதிய காய்கறிகளை மட்டுமே உபயோகிக்கவும்.