இறால் தம் பிரியாணி

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த இறால் தம் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள்.

இறால் தம் பிரியாணி மற்ற பிரியாணிகளில் இருந்து மாறுபட்ட ஒரு மாபெரும் சுவையை கொண்ட உணவாகும். இறால் தம் பிரியாணியின் தனிப்பட்ட சுவையை கொண்டாடி மகிழ அதை சுவைத்துப்பார்ப்பதே ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும். இறால் தம் பிரியாணியின் சுவையை நீங்கள் ஒருமுறை சுவைத்தால் அதை உங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டீர்கள்.

இறாலை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:

 • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
 • கல்லுப்பு – 1 கைப்பிடி

வீட்டுசுவை கரம் மசாலாவை தயார் செய்ய தேவையான பொருட்கள்:

 • இலவங்கப்பட்டை – 4 அங்குல நீளம்
 • கிராம்பு – 8
 • ஏலக்காய் – 8

இறால் தம் பிரியாணியை வதற்குவதற்கு தேவையான பொருட்கள்:

 • சீரகம் – 1 தேக்கரண்டி
 • இலவங்கப்பட்டை – 2 அங்குல நீளம்
 • கிராம்பு – 4
 • ஏலக்காய் – 2
 • அன்னாசி பூ – 2

இறால் தம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

 • இறால் – 1 கிலோ
 • பாஸ்மதி அரிசி – 1 கிலோ
 • கடலை எண்ணெய் – 100 மி.லி.
 • இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
 • தணியா தூள் – 2 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
 • வெங்காயம் – 4
 • தக்காளி – 4
 • பச்சை மிளகாய் – 4
 • தேங்காய் பால் – 1 கப்பு
 • தயிர் – 1 கப்பு
 • கொத்தமல்லி – 2 கைப்பிடி
 • புதினா – 1 கைப்பிடி
 • நெய் – 2 தேக்கரண்டி
 • எலுமிச்சை – 1

இறால் தம் பிரியாணி தயாரிப்பு செய்யமுறை:

 • தோலுரித்த இறாலை கல்லுப்பு மற்றும் மஞ்சள் தூள் கொண்டு சுத்தம் செய்துக்கொள்ளவும். எப்போது இறாலை சுத்தம் செய்தாலும் அதின் வயிற்றுப்பகுதியில் கருப்பு நிறத்தில் காணப்படும் அதன் குடலை நீக்குவதை உறுதி செய்துக்கொள்ளவும்.
 • பின்னர் 3 முதல் 4 நான்கு முறை அதை நீர்கொண்டு கழுவிக்கொள்ளவும்.
 • ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 ½ தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு, மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை கலக்கி அதில் இறாலை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
 • இலவங்கப்பட்டை, கிராம்பு, மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை வாணலியில் உலர்வாக வறுத்தெடுத்து அவற்றை நல்ல பொடியாக அரைத்து கரம் மசாலா வீட்டிலேயே செய்துக்கொள்ளவும்.
 • பாஸ்மதி அரிசியை கழுவி அதை நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
 • கனத்த அடிப்பாகம் கொண்ட ஒரு பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரை எடுத்துக்கொண்டு அதில் கடலை எண்ணெயை விடவும்.
 • எண்ணெய் சூடானவுடன், சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் அன்னாசி பூ ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
 • பின்னர் அதில் நறுக்கி வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
 • பின்னர் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கி தக்காளியை சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
 • புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.
 • இந்த மசாலா கலவையில் தயார் செய்து வைத்துள்ள இறாலை போட்டு 1 நிமிடம் வரை வதக்கவும். பின்னர், தயிர், வீட்டில் தயாரித்த கரம் மசாலா, மிளகாய் தூள், மற்றும் தனியா தூளை சேர்க்கவும். குக்கர் அல்லது பாத்திரத்தை மூடியிட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும்.
 • இறாலை அதிக நேரம் சமைத்துவிடக்கூடாது. ஏனெனில், அப்படி செய்வதால் இறால் இரப்பர் போல ஆகி சாப்பிட ஏதுவில்லாமல் போய்விடும். எனவே, இறால் சரியாக வெந்துள்ளதா என்பதை கவனித்து அந்த பதம் வந்தவுடன் ஒரு கப்பு தேங்காய் பாலுடன் 3 ½ கப்பு நீரை சேர்க்கவும்.
 • தேவையான அளவு உப்பை சேர்க்கவும். பின்னர், கொதி வந்தவுடன் அதில் பாஸ்மதி அரிசி சேர்த்து நாசுக்காக கிளறிவிடவும்.
 • குக்கருக்கு மூடியிட்டு நீர் வற்றும்வரை சமைக்கவும்.
 • பின்னர், பிரியாணி மீது கொத்தமல்லி மற்றும் புதினாவை தூவி எலுமிச்சைப்பழத்தை பிழிந்து, தேவையான அளவு நெய்யையும் சேர்க்கவும்.
 • இப்போது இறால் பிரியாணியை தம் போட ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதன் மீது பிரியாணி உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
 • குக்கரில் உள்ள பிரியாணியை ஒரு வாழையிலை போட்டு மூடி பின்னர் பாத்திரத்தை மூடியிடவும். மூடிவழியே ஆவி கசிவதை தவிர்க்க பாத்திரத்தின் மீதுள்ள தட்டின் மீது நீர் நிறைந்த ஒரு கிண்ணத்தை வைக்கவும்.
 • 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிரியாணியை குறைந்த தீயில் தம் போடவும்.
 • தம் போட்டு முடிந்ததும் சுவையான இறால் பிரியாணி சாப்பிட தயாராகிவிடும்.